
இளைய சகோதரனை அரியாசனத்தில் அமர்த்திவிட்டு
இன்னொரு நாள்காட்டி குப்பைத்தொட்டிக்குப் போகிறான்,
தான் கண்ட துன்ப-இன்பங்களில்
இன்பம் மட்டும் இசைக்கட்டுமென்று இலைமறைகாயாக தம்பியை வாழ்த்திவிட்டு.
தன் அண்ணன் தனக்கு இசைத்த வாழ்த்துரை
இளையவனுக்காவது பலிக்குமா? உஹும்!
ஏளனமாய்ப் பாடிய வாழ்த்தை
இளையவன் (வாழ்த்த வயதின்றி) வணங்கி ஏற்றுக் கொள்கிறான், தன் முழு வலிமையுடன்.
வண்ணமயமான வருடம் அமையப் போவதில்
சந்தேகமில்லை அண்ணனுக்கு - ஆனால்
எந்த வண்ணம் கோலோச்சும்?
எண்ணமும் ஏக்கமும் தம்பிக்கு.
வெள்ளையான நாட்களை
விருப்பம் போல் நேசிக்கத்தான் விருப்பம்;
பழையன முழுமையாய்க் கழியாமல் புதியன புகுவதால்
வெள்ளை கருப்பின் பக்கம் இழுக்கப்படுமோ?
அண்ணன், அப்பா, அம்மா அனைவரும்
கருப்பு வெள்ளையின் இடையில்தான் இளைப்பாறியுள்ளனர்.
இடையில் நிற்காமல் இரு பக்கத்தில்
ஒரு பக்கம் சேர கொள்ளை ஆசை தம்பிக்கு.
வாட்டமாய் இருக்கும் வலப்பக்கத்தில் கருப்பு,
இன்னலின்றி இடையூறாய்த் தோன்றும் இடப்பக்கத்தில் வெள்ளை.
பக்கவாட்டில் வசதியாய் 'வாடா' என்கிறது வலம்.
இனிவரும் இளையவர்களுக்கு இன்பம் ஈட்ட இழுக்கின்றது இடம்.
வசதிக்கும் அசதிக்கும் தம்பி வலப்பக்கம் திரும்ப,
இடைவிடாமல் இளிக்கின்றது இடப்பக்கம் - ஹா-ஹா-ஹா!
இடதின் குணமே இதுதானோ என்று
வலதின் பக்கம் வளைகிறான் தம்பி.
வலதின் வழியெங்கும்
இடதின் ஒலி கூடக் கூட,
சுற்றம் பார்க்கும் தம்பிக்கு
அண்ணன்களின் ஆரவாரம் ஆழிப்பேரலையாய் அச்சுறுத்துகிறது.
அடுத்தடுத்த தலைமுறைக்காக வெள்ளை நோக்கி நகர,
இன்றைய இன்ப இசையை மீண்டும் மீண்டும் கறுப்பாய் நுகர,
முன்னும் பின்னும் செல்லப்போகும் இந்த தம்பியின் வாழ்க்கையும்
வண்ணமயமாய் அமைந்துவிடும் போலும், அண்ணன்களின் அருளால்!
இப்படிக்கு,
வாழ்த்துகளுடன் வண்ணமயமாய் விடைபெறும்,
கி.மு.விலிருந்து கி.பி. இன்று வரை தம்பிகளை மனமாற வாழ்த்தும் அண்ணன்களில் இளையவன் - 2018
வாழ்க வளமுடன்; வண்ணங்களுடன்
No comments:
Post a Comment