
இன்னுமொரு புத்தாண்டு
இனிதே பிறக்கின்றது.
காலத்தாயின் கண்களில்
காணக்கிடைக்காத களிப்பு.
___
பட்டாசுகளின் பளபளப்பு - பிள்ளைகளின்
பற்களில் பிரதிபலிக்கின்றது.
கிழிக்கப்படாத நாள்காட்டி - கடந்த ஆண்டின்
கிழிசல்களை ஒட்டுகின்றது.
ஆர்ப்பரிக்கும் ஆரவாரங்கள்
ஆரிருளை அறுக்கின்றது.
புன்னகைகளும் பூரிப்புகளும்
புண்களை போக்குகின்றது.
முத்தங்களும் சத்தங்களும்
மொத்தங்களை மொய்க்கின்றது.
வாழ்த்துகளும் வண்ணங்களும்
வாவென்று அழைக்கின்றது, இரண்டாயிரத்து இருபதை.
சென்றுவிடலாமா?
வேறு வழியில்லை.
வென்றுவிடலாமா?
...
காலத்தையா?!
___
முதல்நாளின் முடிவா?
முழுமுதல் தொடக்கமா?
சத்தமிடும் சபதங்கள்
சங்கீதம் படிக்குமா?
சிரிக்கின்ற உதடுகள்
சந்தேகமின்றி பேசுமா?
கட்டியணைக்கும் கைகள்
கைபிடிக்கக் கிட்டுமா?
குறைவில்லா குறுஞ்செய்திகள்
குறையாமல் குரைக்குமா?
யோசிக்காத வாழ்த்துகள்
யாசிக்காமல் வரவேற்குமா?
___
சந்தேகங்கள் சங்கமிக்க
சூரியன் சரிகிறான்.
சலனங்கள் சலசலக்க
சந்திரன் சிரிக்கிறான்.
சாயும் காலங்களின்
சாயம் காணுங்கள்;
சாவைச் சந்திக்காத
சாயங்களில் சபதமிடுங்கள்!
___
காலத்தை வெல்வதா?
இல்லை,
கனவுகளைக் கொள்((ல்)வதா?
விடாமல் கேட்டுக் கொண்டிருக்கும்
விடைதெரிந்த கேள்விளுக்கு
விடுதலை கொடுப்போம்.
வினாக்கள் வெடியட்டும்;
விடைகள் விடியட்டும்,
இப்புத்தாண்டில்.
No comments:
Post a Comment