Tuesday, 12 May 2015

பயணம் [சிறுகதை]

-இர. தமிழழகன்


PDF-ஆக படிக்க மற்றும் பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும். நன்றி!


கடைசிப் படியில் தொங்கிக் கொண்டிருந்தவன் படிப்படியாய் முன்னேறி இப்போது நடத்துனரின் இருக்கைக்கு அருகில் நின்று கொண்டுள்ளான், விரைவில் பயணிகளின் இருக்கைகளுக்கு முன்னேறிவிடுவோம் என்கிற தன்னம்பிக்கையுடன். நம் மாநகரங்களில் பேருந்தில் பயணம் செய்வது ஏறத்தாழ ஒரு வாழ்க்கைப் பயனமாகிவிடுகின்றது, முன்னேற்றம் என்பது இரண்டிலும் கடினம்தான், சம்பந்தப்பட்டவர் உழைத்தாலொழிய.

கொஞ்சம் உள்ளதான் வாங்களேம்ப்பா”, என்று கோபத்தில் தோளை அமிழ்த்தித் தோழனாய் நடத்துநர் தள்ளிவிட, பின்னிருந்தவர்களின் ஆதரவோடு பத்து பயணிகளின் விருப்பமில்லா உதவியுடன் பேருந்தின் மையத்திற்கு முன்னேறினான், புகழ். நிம்மதிப் பெருமூச்சை எதிர் நின்றவருடன் பரிமாறிக்கொண்டான்அவ்வளவு நெரிசல். கூரைக்கதவு இவன் தலைக்கு அண்மையில் திறந்திருக்க, வெளிக்காற்று இதமாய் வீசியது. இவன் அனுபவிப்பதைக் கண்ட சிலர்கொடுத்து வைத்தவன்டா!’ என்று கூறுவதைப் போலிருந்தது இவனுக்கு.

சில இருக்கைகளுக்கு அருகிலிருக்கும் நீள்கம்பியில் தன் முதுகைச் சாய்த்தவாறு கைபேசியை ஆராயலானான். திரைப்படம் ஆரம்பிக்க இன்னும் இருபத்தைந்து நிமிடங்களே உள்ளன; தலைவர் படம் வேறு. முதல் நாள் முதல் ஆட்டமும் தவறிற்று - சீட்டு கிடைக்கவில்லை. மாலைக்காட்சிக்குத்தான் சென்றுகொண்டிருக்கிறான். பத்து நிமிடங்களில் இறங்கிவிடலாம்; திரையரங்கிற்குச் செல்ல ஐந்து நிமிடங்கள்; எப்படியும் படம் ஆரம்பிப்பதற்குள் போய்விடலாம்இப்படி தனக்கு என்றென்றைக்கும் வராத கணக்கைக் கச்சிதமாய் போட்டுக்கொண்டிருக்கிறான். கால் சட்டைப் பையில் கைபேசி அதிர்ந்தது; நண்பன் திரையரங்கிலிருந்து அழைக்கிறான். ஏற்கனவே ஐந்து முறை அழைத்துவிட்டான். ‘உச்கொட்டி இவன் தன் கைபேசித் திரையைத் தள்ள, அருகில் அமர்ந்திருந்தவர் எந்திருக்கலானார். நின்றுகொண்டிருந்த இருவரிடம் போட்டியிட்டு உட்கார இடத்தைப் பிடித்துவிட்டான். அழைத்த நண்பனிடம் கைபேசியில், “மச்சி, வந்திட்டிருக்கண்டா! சாவடிக்காத... இப்பதான் இந்தகூட்டத்துல உக்காரவே எடம் கெடச்சுது!” என்று சலிப்பாய்க் பதிலளிக்க, எதிர்முனையிலிருந்த நண்பனோ, “டேய், ஒழுங்கா வந்து சேரு. நம்ம தலைவர் படம் வேற... எப்பவும் போல இழுத்தடிக்காத, நாங்க இருக்கமாட்டோம், பாத்துக்க...” என்று மறுமொழிந்தான்.

***

புகழ் - கல்லூரி முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் இரண்டு தேர்வுகள் உள்ளது, பட்டப்படிப்பு சான்றிதழை வாங்க. வேலை ஏதுமில்லை, தேடிக்கொண்டிருக்கிறான், அனைவரைப் போலும். நன்பர்கள், தினசரிச் செய்தித்தாள், திரைப்படங்கள்இவற்றைத்தவிர வேறெதிலும் நாட்டமில்லை. அப்பா அவ்வப்போது கூறும் சில நேர்காணல் தேர்வுகளுக்கு மட்டும் சம்பிரதாயத்திற்குச் சென்றுவருவான், வேலை வராது என்ற நம்பிக்கையுடன்.

***

கூட்டமான பேருந்தில் இடம் கிட்டுவது, புகழிற்கு வேலை கிட்டுவதைப் போல. இன்று அதிர்ஷ்ட தேவதை இவனுக்கு ஆதரவாய் இருந்தாள். நெரிசல் நேரங்களில், பேருந்தில் இடம் கிடைக்கும்போது கிடைக்கும் சுகமான உணர்வு, பயணிகளுக்கே உரித்தானது.

பெருமூச்சுடன் நண்பனின் அழைப்பைத் துண்டித்தான். சன்னல் வழி வரும் காற்றை அனுபவிக்க ஆரம்பித்தபோது, அருகிலிருந்தவர் ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கேட்டான்கைபேசி அழைப்பிலல்ல; கைபேசியுடன். கை பேசியிலுள்ளஒலி இயக்கியுடன் (வாய்ஸ் நேவிகஷன்) பேசிக்கொண்டிருந்தார். ‘நாளை காலை பதினோரு மணிக்கு தொழில்நுட்பச் சந்திப்புஎன்று ஆங்கிலத்தில் இவர் கட்டளையிட, கைபேசி அதைக் கேட்டுச் செயல்பட்டது. ‘நம்மைக் காட்டிலும் புத்திசாலியாய் இருக்கும் போல?’ என்று தனக்குள் வினவிக்கொண்டான். அவரின் கைபேசியின் குறிப்புகளை உற்று நோக்கியதில் அவர் பெயர்சுந்தர்என்று தெரிந்தது. தன் கைபேசியில் அந்த அமைப்பு உள்ளதா என்று சோதிக்க ஆரம்பித்தான்.

சற்றே வியப்புடன், அவரை உற்று கவனிக்கலானான், அவர் பார்வையில் படாமல். வெள்ளைச் சட்டை, அழகாய் வாரிய முடி, கறுப்புக் காலணிகள் என்று வேலைக்குச் சென்று திரும்பும் அனைத்து அடையாளங்களும் தென்பட்டன, சுந்தரிடம், கையிலிருந்த மடக்கி-நீட்டும் கோலையும், கண்ணை மறைத்திருந்த கண்ணாடியையும் தவிர. இவன் செய்கையின் போது அவர் கண் சற்றே இவன் பக்கம் திரும்ப, புகழ் சுதாரித்துக் கொண்டான். பின், ‘அவரால் பார்க்க முடியாதில்ல?’ என்றெண்ணி அவருக்கு தெரியாமல் அசடு வழிந்தான்.

பயணம் தொடர்ந்தது.

இவனின் கைபேசி சிணுங்கியதுமீண்டும் நண்பர்கள்! “டேய், தோ எறங்கிட்டேண்டா...” என்று மறுமுனையில் இருந்தவனிடம் சீறியவாறு எழுந்தான். இவன் கணக்கிட்ட பதினைந்து நிமிடங்கள் கழிந்திற்று. அடுத்த பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும். கூடவே சுந்தரும் எழுந்தார். “இது ஹாஸ்பிடல் ஸ்டாப்தான?” என்று பேருந்தின் நீள்கம்பியை பிடித்தவாறு வினவினார். இவன் செல்லும் திரையரங்கைக் காட்டிலும், அவர் கூறிய மருத்துவமனையே அங்கு பிரபலம். “ஆமா, வர்ற ஸ்டாப்தான்,” பின்னிருந்தவரை மேலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, “நீங்க முன்னால போங்க,” என்று கூறினான். நன்றி மொழிந்து முன்னேறினார், சுந்தர்; பின்தொடர்ந்தான். நெரிசலில் இல்லாத வழியில் முன்சென்று கொண்டிருந்தனர் இருவரும். படியிலிருந்த மாணவர்கள் பேருந்து நிலையம் வந்ததும் இறங்கினார்கள். அதிலொருவன், “மச்சி, நம்ம தலைவர யாராலும் அடிச்சிக்க முடியாதுடா!” என்று இவன் இன்னும் சிறிது நேரத்தில் வழிபடப் போகும் அதே தலைவனைப் பற்றிப் புகழ்ந்தான், வேறோரு திரையரங்கிலிருந்து வீட்டுக்குச் செல்லலும் ஒரு மாணவன். படத்திற்கான எதிர்பார்ப்பு இவனிடம் இன்னும் அதிகரித்தது. ஓட்டுநர் வழக்கம் போல் நகர்த்துவதற்கு முன் வண்டியை முறுக்க, அதிர்ந்த சுந்தர் தன் பிடியிருந்து தடுமாறினார். இறங்கப் போகும் பயணிகளின் உந்துசக்தியை தாக்குபிடிக்க முடியாமல் புகழும் முன் சென்று உதவ, படியிலிருந்து கால் நழுவி கீழே விழுந்தார், சுந்தர்.

அனைவரும், ஐயோ, அச்சச்சோஎன்று பேருந்தில் இல்லாத இடங்களிலெல்லாம் தலையைவிட்டு எட்டிப்பார்த்தனர். மாணவர்களும், புகழும் சுந்தரை எழுப்பி நிறுத்தினர். தலைவனின் ரசிகனான மாணவன், கீழிருந்த கண்ணாடியை எடுத்துக் கொடுக்க, அவர் உடைகளை லேசாய்த் தட்டி, அருகிலிருந்த நடைபாதையில் அமர வைத்தான், புகழ். “சார், எதனா குடிக்கறீங்களா?” என்று இவன் பேருந்து நிலையத்தைச் சுற்றி கடைகளைத் தேட, தன் பையிலிருந்த தண்ணீரை எடுத்து மெதுவாய்க் குடித்தார், சுந்தர். ஓட்டுநரை, நடத்துனருடன் சிலர் கடிய, பேருந்து மேலும் சிலரின் குசல விசாரிப்புகளுடன் நகர்ந்தது. மாணவர்கள் வழக்கம் போல் ஓடிச்சென்று தொற்றிக்கொண்டனர்.

சுந்தர் நடைபாதையிலிருந்து எழும்போதுதான், அவரின் கையில், முட்டிக்கு அருகில் இரத்தம் வருவதைக் கண்டான், புகழ். “சார், கையில கொஞ்சம் காயம் பட்டிருக்கு, ரத்தம் வருது பாருங்க! வாங்க பக்கத்துல ஹாஸ்பிடலுக்கு போய் பாக்கலாம்,” என்று பார்க்க முடியாதவரிடம் பார்க்கச் சொல்லி தன் கைக்குட்டையை அழுத்திக் காயத்தில் கட்டினான். அவர்எதுக்கு தம்பி உங்களுக்கு சிரமம்? நான் பாத்துக்குறேன். அவ்ளோ பெரிய அடி மாதிரி தெரியலே...” என்று சர்வசாதரனமாய் பதிலளித்தார்.

இல்ல, சார்...”

பரவாயில்ல, தம்பி. ரொம்ப புதுசாலாம் ஒன்னும் அடி படல. நான் இதெல்லாம் பாத்து தானே ஆகணும். நீங்க அவசரமா எங்கனா போயிட்டிருப்பீங்க, எதுக்கு உங்களுக்கு சிரமம்? வீடு தூரம் வேற!”, என்று நடக்க ஆரம்பித்தார்.

சிந்திக்கலானான். தான் அவசரம் தலைவரைப் பார்த்து ஆரவாரம் செய்யவேண்டும் என்று யோசித்தாலும் மனம் என்னவோ சுந்தரை வீடு வரையாவது பத்திரமாக கொண்டுபோய் சேரத்து விட வேண்டுமென்று சொன்னது; சிறிது தயங்கினான், முடிவெடுக்க. மனம் என்றுதான் நமக்கு உடனே தீர்வுகளை தந்திருக்கிறது? அவர் செல்வதைக் கவனித்துக் கொண்டேயிருந்தான். சுய மகிழ்ச்சியா, மனித நேயமா? புகழின் மனத்தினுள் போர் மூண்டது.

மனித நேயம் வெற்றி முரசை முழங்க, அவரைப் பிடிக்க வேகமாய் நடந்தான். கணிசமான தூரம் நடந்திருந்தார் சுந்தர்.

சுந்தர் சார்! சுந்தர் சார்!”

நான்தான் பாத்துக்குறேன்னு சொன்னனே தம்பி? எதுக்கு உங்க வேலை நேரத்த வீணாக்குறீங்க?”

தன்னைக் கண்டுபிடித்ததில் அதிசயித்தவாறு, “இல்ல, சார். உங்களே வீட்டுல விட்டுட்டேன்னா எனக்கு கொஞ்சம் திருப்தியா இருக்கும். அதான்...,” என்று பதிலளித்தான்.

பரவாயில்ல மிஸ்டர்....?” – இவன் பெயரை வினவினார் சுந்தர்.

புகழ், சார்,” இவன் பதிலளிக்க, இருவரும் சிறிது தூரத்தை ஒன்றாய்க் கடந்திருந்தனர். புகழ் பேசி அவரை சம்மதிக்க வைத்துவிட்டான். வீடு வரை போக இன்று சுந்தருக்கு ஒரு தோழன் தோள் கொடுக்கிறான்; அவருக்கும் மகிழ்ச்சி.

நான் சார்லாம் இல்லை. சுந்தர்னே கூப்டலாம். என் பேர் எப்டி...?”

நீங்க போன்ல மீட்டிங் பத்தி குறிச்சபோது பக்கத்துல பாத்தேன். தப்பா எடுத்துக்காதீங்க” – அசடு வழிந்தான் புகழ்.

ஹா ஹா, பரவாயில்லை புகழ். எல்லாரும் பண்றதுதான்

பேருந்தில் இவர் கைபேசியை உபயோகிக்கும் நடை, தன் குரலைக் கண்டுபிடித்தது, இவரின் பணிவான பேச்சு என வியப்படைந்தவன் இவரின் பதிலைக் கேட்டு மேலும் அதிசயிக்கலானான்.

எப்டி சார்... இல்ல... எப்டி சுந்தர் இதெல்லாம் தெரியுது உங்களுக்கு?”

பிறந்ததுல இருந்து இப்டி இல்ல, புகழ். நடுவுல ஒரு சின்ன விபத்து. எதுக்கிப்ப அதெல்லாம்? உங்க வேலைதான் என்னால கேட்டுப் போச்சு...”

அட அத விடுங்க, சுந்தர். பெருசா ஒண்ணுமில்ல, தலைவர் படம் முதல் நாள் இன்னைக்கு. அது நாளைக்கு கூட பாத்துக்கலாம். உங்கள பத்தி சொல்லுங்கஎன்ற அவன் மனதுள் தற்போது தலைவரின் இடத்தில் சுந்தர் அமர்ந்திருந்தார்.

பேரு உங்களுக்கு தெரியும். சென்னைதான். எம். பி. . படிச்சிட்டு ஒரு கம்பெனில மேனேஜரா இருக்கேன். நீங்க?”

இவனை வியப்படையச் செய்வதற்கு சுந்தர் தயங்குவதாயில்லை. அவர் ஓர் அசாதாரண மனிதனாகவே இவனுக்குத் தோன்றினார். ‘நாம என்னடான்னா இன்னும் ரெண்டு பேப்பர முடிக்கவேயில்ல, இவரு என்ன இப்டி இருக்கார்என நினைத்துக் கொண்டான். சுதாரித்து, “பி. டெக். முடிச்சிட்டு வேல தேடிட்டு இருக்கேன். கெடைக்கும். கெடச்சிடும்.” என்றான்.

சீக்கிரம் கிடைக்க என் வாழ்த்துக்கள். அப்பா அம்மாலாம்?”

இருவரும் நடையைத் தொடர்ந்தனர்.

வீடு வந்தது. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் ஓரளவு அறிந்திருந்தனர். புகழ் கதவைத் திறந்து விட, சுந்தர், “மேலதான் இருக்கேன்,” என்று படியில் ஏற ஆரம்பித்தார். பையிலிருந்த சாவியை எடுத்து கச்சிதமாய் வீட்டுக் கதவை திறந்தார். உள்ளே இருந்த நாற்காலியில் இவன அமரச் சொல்லிவிட்டு சமயலறை சன்னலருகில் இருக்கும் முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தார். வீட்டிற்குள் அவரது வேகம் இவனை பிரம்மிக்க வைத்தது. புகழ் வலுக்கட்டாயமாய் உதவ, காயத்திற்கு முறையான கட்டு கட்டாயிற்று.

டீயா, காபியா?”

அதெல்லாம் வேணாம், சுந்தர். நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க

டீயா, காபியா?” – சுந்தர் விடுவதாயில்லை.

இல்ல... சரி, தண்ணி மட்டும் போதும். நானே எடுத்துக்கறேன்,” என்று எதிரில் இருந்த நாற்காலியில் அவரை அமரச் சொல்லிவிட்டுச் சென்றான்.

தண்ணீர்ப் பருகி வந்தமர்ந்தவனிடம், “வேலைன்னா இப்பெல்லாம் கல்லூரியிலே வாங்கிடனும், புகழ். இல்லன்னா கொஞ்சம் கஷ்டம்தான்.  ஆனா, தன்னம்பிக்கையோட தேடனும். உங்கள பாத்தா ஒன்னும் கெடைக்காத மாதிரி தோனல எனக்கு. நல்லாப் பேசறீங்க, நல்லவரா இருக்கீங்க...” என்றார் சுந்தர். நண்பர்களின் வஞ்சப்புகழ்ச்சி அணியில் வாழ்பவனுக்கு வாழ்த்து மழை. கொஞ்சம் குளிர்ந்துதான் போனான்.

இல்லங்க, நமக்கு எதிலும் கவனம் போக மாட்டேங்குது. படம், பசங்கன்னுதான் இருக்கேன். எந்த விஷயத்திலும் ஒரு நாட்டம் இல்ல,” என்று தன் விரக்தியை பதிவு செய்தான்.

என்ன புகழ் அதுக்குள்ள இப்டி பேசறீங்க? இப்பதான கல்லூரியே முடிச்சிருக்கீங்க? இன்னும் நெறைய விஷயங்கள் நீங்க பாக்க வேண்டியிருக்கு. மொதல்ல உங்களுக்கு என்ன பிடிச்சிருக்குன்னு கண்டுபிடிங்க. அதுதான் இருக்கறதுல கஷ்டமான வேலை. அதுக்கப்பறம் அதுல தன்னம்பிக்கையோட உங்க முயற்சிய முழுசா போடுங்க. கண்டிப்பா சாதிக்கலாம். நம்பிக்கைதான வாழ்கை

கூர்ந்து கேட்டவன், “நீங்க விரும்பிதான் எம். பி. . படிச்சீங்களா, எப்டி?”
           
இல்லல்ல, எனது ஆசையெல்லாம் இந்த ரோட்டோரம் தள்ளுவண்டிக் கடைகல்லாம் இருக்குல்ல? உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே? அவங்களையெல்லாம் ஒழுங்கான முறையில் ஈடுபடுத்தி ஒரு பெரிய தொழில் செய்யனும்னுதான் ஆசை. நிறைய சிக்கலிருக்கு. ஆனால் செஞ்சா நம்ம அவங்களுக்கு ஒரு சீரான வழிய ஏற்படுத்திக் கொடுத்த மாறியும் இருக்கும்; நாமளும் சம்பாதிக்கலாம். ஆனா, இப்ப அதெல்லாம் முடியாது. அதனால, ஒரு சராசரி மனுஷனா வாழ்ந்திட்டு இருக்கேன்,” என்றார்.

சராசரி மனிதன்? தனக்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தன புகழிற்கு. சாதிக்க வேண்டும். ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். கல்லூரியில் எத்தனை தொழில்கள் குறித்து விவாத்திருப்போம்? என்னென்னவெல்லாம் பேசியிருப்போம்? ஆனால், இப்போது என்னவாயிற்று? ஏதேனும் ஒரு காரியத்தில் இறங்கி முழுதாய்ச் செய்ய வேண்டும்.

பேச்சு தொடர்ந்தது.

அவரைக் சிலாகித்து கவனித்துக் கொண்டிருந்தவன் தண்ணீர் பாட்டிலை கீழே வைத்தவாறு மேலெழுந்தான்.

மணியாச்சு! கிளம்புறேன், சுந்தர். நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க. இன்னொரு நாள் பாப்போம்

கண்டிப்பா! ரொம்ப நேரம் பேசிட்டோம்ல? ரொம்ப நன்றி, புகழ். கண்டிப்பா மீண்டும் பாப்போம்,” கைகுலுக்கினார் சுந்தர்.

நன்றிய மொதல்ல விடுங்க நீங்க! பாப்போம்,” என்று தன் காலனியை மாட்டினான். தத்தமது கைபேசி எண்களை பரிமாறிக்கொண்டனர் இருவரும். படியில் இவன் இறங்க, ‘புகழ் பஸ் பிரண்ட்காண்டக்ட் சேவ்டுஎன்று புகழின் எண் பதிவானதை சுந்தரின் கைபேசி உரைத்தது. மகிழ்ச்சியுடன் கொஞ்சம் வேகமாய் படியில் இறங்கலானான். சென்னைக் கால்வாயாக இருந்தவனின் முகம் தெளிந்த நீரோடையாய் மாறியிருந்தது.

***

பேருந்தில் வீடு திரும்பினான். கூட்டங்கள் சலிப்புத் தட்டவில்லை. இவனைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையிடம் வெவ்வேறு முகபாவனைகள் செய்து சிரிப்பூட்டினான். தன்னை ஒரு புது மனிதனாய் உணரத் தொடங்கினான். சன்னல் காற்றை வழக்கத்தை விட அதிகமாய் அனுபவித்துக் கொண்டிருந்தான். தான் சாதிக்கப் போவதை எண்ணி மலர்ந்த முகம் வாடுவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை.

கைபேசி சிணுங்கியது.

மச்சி, படம் தாறு மாறு, மாறு தாறு! செமையா இருந்துச்சு. கோட்ட விட்டுட்டியேடா?” எதிர்முனையில் நண்பன்.

இனிமேதான்டா கோட்டைய பிடிக்கவே போறேன்,” கண்களில் உத்வேகத்துடன், கர்வமாய்க் கூறினான் புகழ்.


(முற்றும்)

No comments:

Post a Comment

புத்தாண்டின் இரவு

இ ன்னுமொரு புத்தாண்டு இனிதே பிறக்கின்றது. காலத்தாயின் கண்களில் காணக்கிடைக்காத களிப்பு. ___ ப ட்டாசுகளின் பளபளப்பு - பிள்ளைகளின...