-இர. தமிழழகன்
கணினியின் திரை அணைய விழித்திரைகள் இவனது கண்களை அனைத்துக்கொண்டது. சுழலும் நாற்காலி சிறிது இடமும் வலமுமாய் நகர்ந்து வலப்பக்கத்தில் நின்றது. நாற்காலியின் விளிம்பில் அமர்ந்து...
இல்லை, கிட்டத்தட்ட படுத்துக்கொண்டிருக்கிறான் புகழ். விசைப்பலகையின் அருகில் தண்ணீரில் முங்கியிருக்கும் தேநீர் பொட்டலத்தின் பெயரட்டை அடிக்காத காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றது -
தூங்கிவிட்டான்!
***
உயிரித்தொழில்நுட்பம் கல்லூரியில் இவனது பிரிவு. படிப்பதற்கு மருத்துவச்சீட்டு கிடைக்காததாலும், உயிரியலின் பால் உள்ள ஆர்வத்தாலும், கணிதம் வராது என்றும் எண்ணி பொறியியலில் இந்தப் பிரிவைப் பறித்தான். ஆனால், பொறியியல் அல்லவா? இரண்டு வருடங்களுக்கு, நான்கு பாடங்கள் கணிதம் –
எப்படியோ தேர்ச்சியடைந்தான். மற்ற பாடங்களை எளிதில் படித்துவிடுவான். எளிதில் படித்து முடித்து மட்டும் என்ன பயன்? இப்போது கணிப்பொறியின் எலியைத் தட்டிக்கொண்டிருக்கிறான். வளாக நேர்க்காணல் மூலம் தேர்ச்சி பெற்று சராசரியான ஊதியத்தில் ஒரு தகவல் தொழில்நுட்பத் தொழிற்சாலையில் பணிபுறிகிறான்.
பற்பல ஆசைகள் இவனுக்கு –
உலகம் முழுக்கச் சுற்ற வேண்டும், பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள வேண்டும், சுயமாய் நண்பர்களுடன் தொழில் தொடங்க வேண்டும், இந்திய அரசாணயத்தில் ஒரு அதிகாரியாய்ப் பொறுப்பேற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், திரைப்படத்துரையில் நுழைய வேண்டும், இன்னும் பல...
ஆசைகள் கோடி, எது எப்போது நடக்கும் என்று தெரியாமல் பணிக்கென்று எங்கோ சென்று கொண்டுள்ளான்.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தால் இப்படித்தான் என்று சொற்பொழிவாற்ற விருப்பமில்லை அவனுக்கு. தான் எப்படியாவது என்றாவது ஒரு முத்திரையைப் பதித்துவிட வேண்டுமென்பது அவனது ஆசை, கற்பனை எல்லாம். ஏதேனும் ஒன்றை எடுத்து அதில் நுழைந்துவிடலாமென்று முடிவெடுத்து அதற்கான காரியங்களை செய்யத் தொடங்குவான்; அடுத்த நாளே எடுத்த முடிவு இவன் மூளையின் மூலையில் முடங்கிவிடும். அதற்கடுத்த நாள் இன்னொரு முடிவு, அடுத்த நாள் மூளையின் இன்னொரு மூலை. என்ன செய்வான், பாவம்? அவனும் இன்னொரு இருபத்தோரு வயது இளைஞன்தானே?
***
அலுவலகத்தின் திறப்பு விழா இன்று. புறநகரமாய் இருந்தாலும் இரண்டு வருடத்திற்குள் திட்டமிட்டபடி நடந்துவிட்டது. நண்பர்கள் ஒவ்வொருவரும் தத்தமது வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். தோரணங்களை ஒருவன் கட்ட, வரவேற்பரையை –
ஒரு நாற்காலி, ஒரு மேசைதான், தற்போதைய காலகட்டத்தின் வடிமைப்பில் –
தோழி ஒருத்தி அலங்கரித்துக் கொண்டிருந்தாள். சிற்றுண்டிக்கு வரவேண்டிய வாகனம் வராததால் விசாரிக்க, இருசக்கரவண்டியின் சாவியை புகழிடம் வாங்கிக் கொண்டு கிளம்புகிறான், இன்னொருவன். திறப்புவிழாவிற்கு வரப்போகும் பிரபலத்தை வாசக வடிவில் வரவேற்க பெரிய திரையை இழுத்துப்பிடித்து கட்டிகொண்டிருக்கின்றனர், மூவர். வேலை சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருக்கின்றது. திறப்பு விழாவிற்கு குறித்த நேரமும் நெருங்கிவிட்டது.
அரை மணிநேரம் கழித்து...
கிட்டத்தட்ட அனைத்தும் சரிவர அமைந்துவிட்டது. கூட்டாளிகள் எட்டு பேர் அவர்கள் நினைத்த இடங்களில் அமர்ந்து மொக்கைகளையும் தத்தமது வேளைகளின் பெருமைகளை பரிமாறிக்கொண்டிருந்தனர். இன்னும் இரண்டு பேர் சின்ன வேலையாக அருகேயுள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ளனர். விழாவிற்கு வரவேண்டிய பிரபலத்தின் மேலாளருக்கு கைபேசியிலிருந்து அழைக்கிறான்; பதிலில்லை. நேரமாகிவிட்டது. மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டிருக்கிறான். திரைத்துறைக்கு வரும் இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் பிரபலம்; ஆதலால் அனைவரும் வந்துவிடுவார் என்று சொல்லிக்கொண்டிருந்தனர். சிலர் பெரிய இடத்து ஆட்களெல்லாம் இப்படித்தான் என்று சலித்துக்கொண்டனர். ஆனால் இவனுக்கென்னவோ சரியாய்ப்படவில்லை. உள்ளுக்குள் ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது. இன்னும் அழைத்துக்கொண்டேதான் இருக்கிறான்; பதிலில்லை. சிலர் கேள்விகளால் குடைய ஆரம்பித்துவிட்டனர். என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்காமல் நண்பன் கீழே விட்ட வண்டியை எடுத்துக்கொண்டு விருட்டென்று கிளம்பிவிட்டான்.
அரை மணிநேர பயணத்திற்குப் பின் பிரபலத்தின் வீட்டை அடைந்தான். அலுவலகத்திற்குத்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவரிடம் வீட்டில் பேசி அழைத்ததால் ஏனோ அங்கு சென்றுவிட்டான். வீட்டுக்காவலாளி தன் பங்கிற்கு கேள்விக்கணைகளை வீச, எப்படியோ ஒரு வழியாய் மேலாளரைப் பார்த்துவிட்டான். அவர் அமரச் சொல்லியும், அமராமல் சிறிதாய் நெலிந்து கொண்டிருந்தான் ஏதும் பேசாமல். அவரே பேச ஆரம்பித்தார், புன்முகத்துடன். அவனை அறியாமல் ஏதோ ஓர் ஆர்வம் கண்ணில் பொங்கியது; காது சிறிதாய் விரிந்த உணர்வு அவனுக்கு.
“இன்று திடீரென்று புதிதாய் வேறொரு வேலை வந்துவிட்டதப்பா; பெரிய இடம். தவற முடியாது போலிருக்கின்றது,” என்றார். சிறிது இடிந்துத்தான் போய்விட்டான். இரண்டு வருட உழைப்பாயிற்றே? “இன்றைய தேதியைநீங்களாக கூறியதால் தானே நாங்கள் எங்கள் விழாவை வைத்தோம்?” என்று சிறிது கோபம் கலந்த வருத்தத்துடன் வினவினான். “ஆமாமப்பா! ஆனால் தற்போதைய நிலை வேராயிற்றே...”
என்று அவர் மழுப்ப பேச்சுவார்த்தை நீண்டது. இவனது சட்டைப்பையிலோ கைபேசி நடனமாடிக்கொண்டிருந்தது –
நண்பர்களின் அழைப்புகள்.
பேச்சுவார்த்தையின் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, “சரி இருப்பா! ஐயாகிட்ட கேட்டுட்டு வந்துடறேன்,” என்று சலிப்பாய் மேலாளர் கூற எங்கோ ஒளிந்து கொண்டிருந்த நம்பிக்கைத் திருடன் தானாய்ச் சரணடைந்தான். காரணம், புதுமுகங்களுக்கு புன்முறுவலுடன் உதபுபவர் அந்த பிரபலம். விழாவிற்கு அழைக்கும் போது உடனே சம்மதிதுவிட்டார். நண்பர்களுக்கு நடந்தவற்றின் வெள்ளோட்டத்தைக் கைபேசியில் சொல்லிவிட்டு மேசையில் இருந்த தண்ணீரை குடித்து அமர்ந்தான். வருங்காலத்தில் நிகழப்போகும் காட்சிகளை நினைத்துப் பார்க்கிறான். நண்பர்களுடன் ஒரே அலுவலகத்தில் காலை முதல் மாலை வரை; அப்பா அம்மாவிற்கு நான்கு-சக்கர வாகனம்; கண்களால் மட்டும் பேசிய காதலியின் கரத்தைப் பற்றுவது… இன்னும் பல.
***
“புகழ்! புகழ்!!’ என்று யாரோ கம்பீரமாய் இவன் தோளில் தட்டி அழைக்க, ஆவலுடன்
திகைத்து எழுந்தான். அலுவலக மேலாளர் தன் மூக்குக் கண்ணாடியை ஆள்காட்டி விரலால்
சரி செய்தவாறு, “அடுத்த வேலைக்கான
விவரங்கள்!” என்று ஒரு
கோப்பைக் கொடுக்கிறார். ஆறியும் ஆறாமலிருந்த தேனீரை ஒரே விழுங்கில் குடித்துவிட்டு, கணினித்திரையின்
பொத்தானை அழித்துகிறான்.
திரை
உயிர் பெற்றது. இவன்?

No comments:
Post a Comment